Friday, May 31, 2013

ஆயிரம் ரூபாய்.....



என்றைக்குமே இல்லாமல் அன்றைக்குத்தான் எனக்கு ஞாபகம் வந்தது. “நீங்கள் எதற்கும் கால பைரவரை தரிசியுங்கள். ஆறகழூர் சென்று வாருங்கள். தோசங்களை நீக்கிவிடும் அற்புதமான தலம், பைரவனின் காலடியில் சரணாகதி அடைந்துவிட்டால், அதற்கு மேல் வருகின்ற துன்பங்களை அவன் பார்த்துக் கொள்ளுவான்” என்று எனக்குத் தெரிந்த சோதிடர் சொன்ன விசயம்  .

அன்றைய தினம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. மனைவியோடும், குழந்தை தியானாவோடும் காரில் கிளம்பிவிட்டேன். என்னவோ அன்றைக்கு பைரவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற ஒரு இனம் புரியாத வேட்கை எனக்குள் கிளம்பியிருந்ததை என்னால் அறிய முடிந்தது.

பொதுவாகவே நான் சிவனை, சித்தர்களை அதிகம் வழிபடும் பக்தனாகியால், பைரவரைப் பற்றியும் கொஞ்சம் நான் தெரிந்து வைத்திருந்தேன். இன்றைக்கும் உண்மையான பக்தனுக்கு பைரவன் ஏதாவதொரு வகையில், தான் அவன் பக்கத்தில் வந்திருப்பதை உறுதி செய்வான் என்று மற்றவர்கள் சொல்லி கேட்டும், படிததும் இருக்கிறேன். ஆனாலும் அவன் சந்நதியில், என் கண்முன்னே நடந்த நிகழ்ச்சி என் கண்களையே நம்ப முடியாததாக இருந்தது. அன்று முதல், இறைவன் எப்போதும் தன் பக்தர்களை கைவிடுவதும் இல்லை. எப்பொழுதும் பக்தர்களின் அருகிலேதான்; இருக்கிறான் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிவபெருமான் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை. ஆனால், தேவைப்படும்போது தனது சக்தியை அனுப்புகிறார். அப்படி சிவனின் மனதிலிருந்து உருவான சிவசக்தியே பைரவர் ஆவார். நவக்கிரகங்களை தனது காலச் சக்கரத்தால் இயக்கிவருபவர் பைரவரே! பெரும்பாலான சிவாலயங்களில் காவல் தெய்வமாக இருப்பவர் பைரவர் ஆவார். 

பைரவர் ஈசனின் பல்வேறு வடிவங்களில் மிக முக்கியமானவர். இவரே கோயில்களின் பாதுகாப்புக்கும் உரிய கடவுள் ஆவார். ஈசன் கோயில்களை பைரவரே காத்து வருவதாக ஐதீகம். முன்காலங்களில் கோயில்களைப் பூட்டிச் சாவியை வெளிப் பிராஹாரத்தில் காணப்படும் பைரவர் சந்நிதியில் வைத்துவிடுவார்களாம். பைரவர் தன் வாகனமான நாயுடன் கோயிலைச் சுற்றி உலா வந்து கொண்டிருப்பார் என்றும், பலர் கண்களிலும் பட்டிருக்கிறார் என்றும் கூறுவார்கள். சிதம்பரத்தில் பைரவர் தனம் தருபவராக இருந்திருக்கிறார். தில்லை வாழ் அந்தணர்கள் தங்கள் பிழைப்புக்குப் பணமோ, பொருளோ இல்லாமல் வருந்த,  ஈசன் பைரவருக்கு ஆணையிட ஒவ்வொரு நாளும் இரவில் பைரவர் பொற்காசுகளை நடராஜர் சந்நிதியில் வைத்து விடுவார் என்றும், அதைக் காலையில் அன்றாட வழிபாட்டுக்கு வரும் தீக்ஷிதர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் சிதம்பரம் வாழ் தீக்ஷிதர்கள் கூறுவார்கள்.

பைரவர் என்றாலே பயங்கரமான ஆள் என்றே அர்த்தம். பாதுகாவலர் என்பதால் பெண்கள் இவரை வழிபட்டால் பெண்களுக்குப் பாதுகாவலாக இருந்து காத்துவருவார். வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே இவரும் உறுதியாகத் தன் காவல் வேலையைச் செய்து வருவதால் சில இடங்களில் இவர் வைரவர் எனவும் அழைக்கப் படுகிறார்

சேலத்தை ஒட்டிய ஆறகழூரில் இருக்குறது அந்த ஆச்சிரியமான தலம். எனக்குள் ஆனந்த கண்ணீரை வரவழைத்த அரியத்தலம். அஸ்டபைரவர்களோடு அமைந்திருக்கும் அற்புத தலம்.

இந்த தலத்திற்குள் செல்வதற்கு முன், கோவிலுக்கென்று இருக்கும் வரலாறு என்னவென்று பார்த்து விடுவோம்.

முன்னொரு காலத்தில், சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவரின் விருப்பத்தை நிறைவேற்ற, பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த லிங்கம் மண்ணில் புதைந்தது. 

பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான் என்பதுதான் இந்த கோவிலின் வரலாறு.

இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை "காயநிர்மாலேஸ்வரர்' என்கின்றனர். "காயம்' என்றால் உடல், "நிர்மலம்' என்றால் பரிசுத்தம் என்று பொருள். அது மட்டுமல்லாமல் இந்த இடம் காமனுக்கு இறைவன் காட்சிக் கொடுத்த இடமாகியால் காமநிர்மலேஸ்வரர் என்றும் இறைவன் அறியப்படுகிறார்..  அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது, லிங்கம் பிரகாசமான ஜோதி வடிவில் காட்சி தருகிறது. தன்னை வணங்குபவர்களுக்கு முடிவிலாத ஆனந்தத்தை வழங்குவதால், சுவாமிக்கு "அனந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. அண்டத்தை படைத்து, நம்மையும் படைத்து பெயர்; கூற முடியாத பல ஆச்சிரியங்களை உண்டாக்கும் இறைவனுக்கு, நாம் வைத்த பெயர்கள் தான்  எத்தனை எத்தனை,?

இந்த ஆலயத்தில் தான் நான் சொன்ன அந்த எட்டு பைரவர்களும் ஒரே இடத்தில் அமைந்திருக்கிறார்கள்.

மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு இறைவனை தரிசிக்கும் ஆவலோடும், பைரவனின் சித்து விளையாட்;டை காணும் ஆவலோடும் உள்ளே நுழைந்தோம்.
பழைய கோவில் என்பதை அந்தக்கால தூண்கள் நமக்குச் சொல்லாமல் சொல்லியது.

முதலில் நம்மை வரவேற்றது தலையாட்டி பிள்ளையார் தான்.
ஒரு பக்கம் தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி நம்மை ஆசிர்வாதம் செய்துக் கொண்டே சிரிப்பது போலிருந்தது அந்த சிலை.

அந்த மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்குவானாம்;. ஒருமுறை கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து "பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?' என்று கேட்டானாம் மன்னன். அதற்கு இவர், "நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவேதான் இவருக்கு "தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்ததாக சொல்லுகிறார்கள். 
பிள்ளையாரை மணமுருக வணங்கிவிட்டு, அடுத்ததாக நாம் சென்ற இடம் அஸ்டபைரவர்களில் முதலாவதாக இருக்கும் கால பைரவர். இவர் இந்த கோவிலின் கோபுரத்தில் குடியிருக்கிறார். கீழேயே நின்றபடி அவரை வணங்கினோம்.

இரண்டாவதாக இருப்பவர் குரோதான பைரவர், இவரின் சந்நிதி நுழைவாயிலின் இடதுபுறத்தில் அமைந்துள்ளது

மூன்றாவதாக அசிதாங்க பைரவர். இவர் மூலவருக்கு இடது பக்கத்தில் எழுந்துள்ளார்

நான்காவதாக சண்ட பைரவர் ஆலயத்தை வலம் வரும்போது  நவக்கிரகத்தின் பின்புறம்  அமைத்துள்ளார்கள் 

ஐந்தாவதாக பீஷண பைரவர் இந்த  5வது பைரவர் கோவிலுக்கு வெளியே மதில் சுவற்றுக்குள் வலது பக்கத்தில்  8 தூண்கள் மேல் அமைந்த திறந்த வெளி  மணடபத்தின் நடுவில் அமைந்துள்ளது .மேலும் இந்த 8 தூண்களும் 8பைரவர்களை குறிப்பதாகவும்  இங்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் 8 பைரவர்களை வ்ணங்கியதற்கு சமம்  

ஆறாவதாக உன்மந்த பைரவர், ஏழாவதாக காலசம்ஹார பைரவர், கடைசியாக ருத்ர பைரவர் என்று அனைத்து பைரவ கடவுள்களையும் தரிசித்துவிட்டு, மனதிலிருந்த குறைகளையும் கவலைகளையும் அவன் காலடியில் கிடத்திவிட்டு, ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியோடு அந்த ஜோதி லிங்க சிவனையும், அம்மன் பெரியநாயகியையும் வணங்கிவிட்டு, சற்று நேரம் கண்களை மூடி பைரவனையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்றோடு நான் பட்ட துயரங்களை நீ எடுத்துக் கொண்டு, இனிமேலாவது என்னை மகிழ்ச்சியோடு வாழச் செய் என்றபடி மனமுருக வணங்கிக்கொண்டிருந்தேன். பிறகு கண் விழித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த மகள் தியானைவை மீண்டும் மீண்டும் சென்று பிடித்துக் கொண்டிருந்தேன்.

என் மனைவியோ “சரி புறப்படுங்கள் நேரமாகிவிட்டது” என்றபடி எழுந்தாள். நானும் மகளை தூக்கியபடி நேராக கொடிமரம் இருக்கிமிடத்தில் வந்தேன். 
மனமுருக மீண்டும் பைரவனை வணங்கிக்கொண்டு நானும் மகளும் சாஸ்டாங்கமாக கொடிமரத்தினருகே விழுந்து வணங்கினோம்.

அப்போதுதான் அந்த அதிசியம் நடந்தது.

எங்கேயோ ஒரு புதையல் இருப்பதை நான் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு…
எனக்குள் ஏதோ ஒரு புது சக்தி இறங்குவது போன்ற ஒரு சொல்ல முடியாத அதிர்வு.

எழுந்தேன். கொடிமரத்தின் அருகே இருக்கும் ஒரு தூண் அருகே மீண்டும் மகள் ஓடுகிறாள். நான் ஓடிச் சென்று பிடிக்கும் போதுதான் கீழே இருக்கும் ஒன்றை  கவனித்தேன்.

ஆம்….அது புத்தம் புது மடிப்பே இல்லாத ஆயிரம் ரூபாய்.


பலபேர் வந்து போகும் அந்த இடத்தில், மற்றவர்கள் கண்ணில்  படாத இந்த பணம், என் கண்ணில் மட்டும் பட்டதிற்கு என்ன காரணம்,?

அதுவும் புத்தம் புது சலவை நோட்டு….யாரோ அப்போதுதான் அதை போட்டுவிட்டு சென்றது போல இருந்தது.

எடுத்தேன். என்றாலும் எனக்குள்ளே ஒரு குற்ற உணர்வு. ஆம்…இது என் பணம் இல்லை. இறைவன் என்னை சோதிப்பதற்காக அவன் போட்ட பணம். அவன் சொத்து. பைரவன் என்னை பதம்பார்க்கிறான். 

பணத்தை நேராக எடுத்துச் சென்று இறைவனின் உண்டியலில் செலுத்தியபடி ஆனந்த கண்ணீரில் நனைந்தபடி சொன்னேன்.

“இறைவா…என்னை நீ சோதிக்க….எனக்காக இந்த இடத்தில் வந்திருப்பதை நினைத்து நான் மகிழ்கிறேன். நாயினும் கீழோன் நான். என்னை பார்ப்பதற்காக வந்த இறைவா…இது ஒன்று போதும்…நீ எப்போதும் நான் கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்பதை உணர்த்தியதற்காக…. நன்றி பைரவா…..”
என்றபடி அதிர்ச்சிகளை தாங்கிக் கொண்டு, ஆனந்தத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

  1. இதுவரை இந்த கோவிலுக்கு சென்றதில்லை... தல வரலாறு, அஸ்டபைரவர்... அதிசயம் உட்பட அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete